search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி மீட்பு"

    சிறுமி மாயமாகி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கான்பெர்ரா:

    ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளத்தில் இருந்து கிளியோ சுமித் என்ற 4 வயது சிறுமி கடந்த மாதம் 16-ந் தேதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்து காணாமல் போனாள்.

    இந்த சிறுமியைத் தேடி பெரியதொரு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிறுமியை பற்றிய தகவல் தருவோருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5 கோடியே 62 லட்சம்) ரொக்கப்பரிசு வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

    இந்த நிலையில் ஒரு வீட்டில் சிறுமி பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலையில் அந்த பூட்டிய வீட்டை போலீசார் உடைத்தபோது அங்கு ஒரு அறையில் அந்த சிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அந்த சிறுமியை ஒரு போலீஸ் அதிகாரி தன் கைகளால் தூக்கி, ‘‘உன் பெயர் என்ன?’’ என்று கேட்டார். அதற்கு அவள் ‘‘கிளியோ’’ என்றாள்.

    அதைத்தொடர்ந்து அந்தச் சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டு, அவளது குடும்பத்துடன் உடனடியாக சேர்த்து வைக்கப்பட்டாள். காணாமல் போன தன் மகள் உயிருடன் மீட்கப்பட்டதில் அவளது தாய் பரவசம் அடைந்தார். இதுபற்றி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ‘‘எங்கள் குடும்பம் மீண்டும் முழுமையானது’’ என குறிப்பிட்டுள்ளார்.

    சிறுமி கடத்தப்பட்டதாக தெரிய வந்து, அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், சிறுமி கிளியோ மீட்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.

    இதுகுறித்து டுவிட்டரில் அவர் குறிப்பிட்டு, ‘‘அற்புதம், நிம்மதி அளிக்கும் செய்தி’’ என கூறி உள்ளார்.

    சிறுமி மாயமாகி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாமகிரிப்பேட்டையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது, தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமியை மீட்டனர்.
    நாமக்கல்:

    தொழிலாளர் உதவி ஆய்வாளர் சுதா தலைமையில் நாமகிரிப்பேட்டை பகுதியில் குழந்தை தொழிலாளர் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமி மீட்கப்பட்டார்.

    பின்னர் அந்த சிறுமியை கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கலெக்டர் அந்த சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இந்த கூட்டாய்வில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனிட் மற்றும் திட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இது போன்ற ஆய்வுகள் தொடரும் என்று தொழிலாளர் உதவி ஆய்வாளர் சுதா கூறினார்.
    கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திய மர்ம பெண்ணை தேடி வருகின்றனர். #Girlrescue

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை சின்ன மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செல்வி. இவர்களது 4 வயது மகள் ஜெயலட்சுமி.

    இந்த தம்பதி சவுகார்பேட்டை ஆதியப்பன் தெருவில் தள்ளு வண்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் செல்வி தள்ளு வண்டியில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அங்கு சிறுமி ஜெயலட்சுமி விளையாடிக் கொண்டிருந்தாள்.

    திடீரென்று ஜெயலட்சுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி மகளை அப்பகுதியில் பல இடங்களில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி ஜெயலட்சுமியை பெண் ஒருவர் கையை பிடித்து அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அப்பெண் சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திய மர்ம பெண்ணை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட சிறுமி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்ததும் அவளை ரெயில்வே போலீசார் மீட்டு தி.நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்ததும் தெரிய வந்தது. போலீசார் காப்பகத்துக்கு சென்று சிறுமியை அழைத்து வந்தனர்.

    சிறுமியை கடத்திய பெண் செங்குன்றத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அப்பெண்ணை பிடிக்க போலீசார் செங்குன்றத்துக்கு விரைந்துள்ளனர். சிறுமியை கடத்திய அவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீசாரை பார்த்ததும் அங்கேயே விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. #Girlrescue

    வியாசர்பாடியில் சிறுமி மாயமானது குறித்து பெற்றோர் புகார் அளித்த 3 மணிநேரத்தில் போலீசார் சிறுமியை மீட்டனர்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே சாலையோரம் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரது மனைவி லட்சுமி. ஆந்திராவை சேர்ந்த இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

    இவர்களது 3 வயது மகள் கீதாம்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவளை லட்சுமி புளியந்தோப்பில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

    அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது திடீரென்று கீதாம்மா மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்

    இந்தநிலையில் வியாசர்பாடி கணேசபுரம் சாலையில் அழுதுகொண்டு இருந்த கீதாம்மாவை வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், எம்.கே.பி.நகர் சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் மீட்டனர்.

    பின்னர் பெற்றோரை வரவழைத்து சிறுமியை ஒப்படைத்தனர். புகார் அளித்த 3 மணிநேரத்தில் மாயமான சிறுமியை மீட்டனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் இருந்து சிறுமி அவளாகவே மாயமானாளா? அல்லது யாராவது கடத்தி சென்றுவிட்டு போலீசுக்கு பயந்து விட்டு சென்றார்களா? என்று விசாரித்து வருகிறார்கள்.
    ஒடிசா மாநிலம் சோனே பூர் மாவட்டம் அருகே கிணற்றில் விழுந்த தனது தங்கையை துணிச்சலுடன் காப்பாற்றிய 9 வயது சிறுமி சாயா கான்டிக்கு கலெக்டர் தலைமையில் பாராட்டுவிழா நடத்தது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் சோனே பூர் மாவட்டத்தில் தாராபா பகுதியில் உள்ள கெந்துமுன்டா கிராமத்தை சேர்ந்தவள் சாயாகான்டி பாக் (9). அங்குள்ள ஒரு பள்ளியில் 4-வது வகுப்பு படிக்கிறார்.

    இவள் தனது 2 வயது தங்கை மிலியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக மிலி அருகேயுள்ள 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து விட்டாள்.

    அதைப் பார்த்த சாயா கான்டி உடன் விளையாடிய சிறுமிகளிடம் இத்தகவலை தனது பெற்றோரிடமும், கிராம மக்களிடமும் கூறி அவர்களை இங்கு அழைத்து வரும்படி கூறினாள்.

    பின்னர் யாரும் எதிர்பாராத நிலையில் தனது தங்கையை காப்பாற்ற துணிச்சலாக கிணற்றில் குதித்தாள். அப்போது தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்த தங்கையை கஷ்டப்பட்டு மீட்டுக் கொண்டிருந்தாள்.

    இதற்கிடையே அங்கு வந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கயிறு மூலம் சாயாகான்டி மற்றும் அவரது தங்கை மிலி ஆகியோரை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    சாயாகான்டியின் வீரம் மிக்க இச்செயல் காட்டுத் தீயாக பரவியது. எனவே சோனேபூர் மாவட்ட நிர்வாகம் சிறுமி சாயா கான்டிக்கு கலெக்டர் தாசரதி சதாபதி தலைமையில் பாராட்டுவிழா நடத்தினர்.

    மேலும் சாயாகான்டிக்கு தேசிய வீர தீர விருதுக்கு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் கல்விக்கு உதவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    தாராபா பகுதியில் இயங்கும் யாதவ் சமாஜ் என்ற சமூக சேவை நிறுவனம் சிறுமி சாயாகான்டிக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவப்படுத்தியது. மகளின் துணிச்சலான செயல் தன்னையும் கிராமத்தையும் பெருமை படுத்தியுள்ளதாக அவளது தந்தை லட்சுமி சரண்பாக் தெரிவித்துள்ளார். #tamilnews
    குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட 16 வயது சிறுமியை போலீசார் மீட்டனர். அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 22), செல்போன் கடை ஊழியர்.

    இவருக்கும் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் 18-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    இதுகுறித்து மதுரை விடியல் ஹோம் குழந்தைகள் காப்பக அலுவலர் மாரீசுவரிக்கு தகவல் கிடைத்தது. அவர் சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமர், சிறுமியின் உறவினர்கள் ரெங்கசாமி, எல்லம்மாள், சரவணன், வித்யா மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×